Monday, August 22, 2011

சாம்பார் வைப்பது எப்படி ஆண்களுக்கு மட்டும்




Warning : இந்த பதிவு ஆண்களுக்கு மட்டும்...பெண்கள் படித்தால் பிறகு எங்களைப்போல் நீங்களும் நன்றாக சாம்பார் வைக்க கற்றுக்கொள்வீர்கள்...அதனால் இப்பதிவினை பெண்கள் படிக்க கூடாது...
(Ranahasuran Sambar Tips Are Subject to Kaaikari Market Risks - Please Read The Conclusion Carefully Before Cooking)











சில மாதங்களுக்கு முன் நான் முதன் முதலில் சாம்பார் சமைத்தேன்... அந்த அனுபவத்தை கூறுகிறேன்... அதனை அப்படியே பின் தொடர்ந்து சுவையான சாம்பார் வைப்பதை எப்படி என்பதை நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள்...


சாம்பார் வைக்க தேவையான பொருட்கள்:
1) துவரம் பருப்பு
2) சாம்பார் பொடி (ஆச்சி அல்லது சக்தி மசாலா)
3) மஞ்சள் தூள் (ஆச்சி அல்லது சக்தி மசாலா)

4) காய்கறிகள்
அ) வெண்டைக்காய் (அல்லது) கத்திரிக்காய் (அல்லது) முருங்கைக்காய்
ஆ) சின்ன வெங்காயம்
இ) பச்சை மிளகாய்
ஈ) காரட்
உ) கருவேப்பிலை
ஊ) கொத்தமல்லி
எ) தக்காளி


இதர மளிகை பொருட்கள் :
5) பெருங்காயம்
6) கடுகு
7) புளி (optional)
8) Refined ஆயில்
9) உப்பு


குறிப்பு : இவை அனைத்தும் மளிகை கடையிலேயே கிடைக்கிறது ( இந்த விவரம் சாம்பார் வைத்த பொழுதுதான் எனக்கு தெரிய வந்தது )


இவை அனைத்து ஜாமான்களையும் கடையில் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன்... காலை சுமார் 11.30 மணியளவில் முதன் வேலையாக எல்லா காய்கறிகளையும் நீரில் நன்றாக கழுவி பிறகு அனைத்து காய்கறிகளையும் பொடி பொடியாக நறுக்கி வைத்துக்கொண்டேன்... இனி செய்முறை...



குக்கர் அல்லது வடிசட்டியில் தேவையான அளவு நல்ல தண்ணீரை நிறைத்து கொள்ளுங்கள் (அது என்ன தேவையான அளவு? அப்டினா எவ்வளவு? இதுபோன்ற கேள்விகளை கேட்காதீர்கள்... தேவையான அளவென்றால்... அது தேவையான அளவுதான் ), நான் முதலில் குக்கரில்தான் இதனை முயற்சித்தேன் பலமணி நேரம் கடந்த பின்பும் 'பருப்பு வேகவில்லை'  ... என்ன காரணம் என்று பார்த்தால் காஸ் தீர்ந்துவிட்டது...   (நோட்ஸ்: சமைப்பதற்கு முன் காஸ் எவ்வளவு இருக்கு என்று சோதித்து பாருங்கள் இல்லாவிடில் பாதி சமையலில் அனைத்தும் நாறிவிடும்), விடுவானா ரணஹாசுரன்? நண்பர் வீட்டில் மின்சார அடுப்பினை கடன் வாங்கி வந்து மீண்டும் கஜினி போல் முயற்சியை கைவிடாது இறங்கினேன்... 

திடீரென்று மின்சாரம் போய்விட்டது, தன்னம்பிக்கை இழக்கவில்லை ரணஹாசுரன். (அட துரோகிகளா)



 "சாம்பார் வை அல்லது செத்து மடி" என்ற தத்துவத்தை நினைவில்கொண்டு மின்சாரம் வரும்வரை காத்திருந்தேன்...

மின்சாரம் வந்தபிறகு சமையலை வடிசட்டியில்தான் வடிவமைக்கவேண்டும் என ஒரு அற்புத முடிவெடுத்தேன்... 



அடுப்பை ஆன் செய்து சிறிது நேரம் வடிசட்டியில் நீரை கொத்திக்கவிட்டு பின் துவரம் பருப்பை கொதிநீரில் போட்டேன்... பருப்பு சிறிது நேரத்தில் நன்கு மலர்ந்து வந்தது...  நல்ல வாசனை... பருப்பு நன்கு வெந்த பிறகு வடிசட்டியை அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டு பின்பு பருப்பு மத்து (அல்லது திடமான குழி கரண்டி) மூலம் அதனை நன்கு மசிக்க செய்தேன்... பருப்பு நன்கு மசிந்து திரவ நிலைக்கு வரும்வரை நன்றாக மசித்த பின் மீண்டும் வடிசட்டியை அடுப்பில் வைத்து மசித்த பருப்பில் சிறிது மஞ்சள் தூளை தூவினேன்... பருப்பு மஞ்சள் தூளுடன் நன்கு வெந்து கொண்டிருந்தது... தற்போது நறுக்கி வைத்திருந்த காய்கறிகளை வடிசட்டியில் மெதுவாக போட்டேன்... (முதலில் அவசரத்தில்போட்டு கைகளை பொசுக்கி கொண்டேன், நிதானம் தேவை)


 ஒரு கரண்டி மூலம் நன்றாக கிளறியபடி சாம்பார் பொடியை மெதுவாக தூவினேன்... அருமையான வாசனை... தேவையான அளவு உப்புனை வடிசட்டியில் போட்டு நன்கு கிளறினேன்... கொஞ்சம் புளியை தண்ணீரில் கரைத்து, கரைத்த நீரையும் அதனுடன் சேர்த்தேன்...


தற்போது இன்னொரு சட்டியில் சிறிது Refined Oil ஐ எடுத்துக்கொண்டு அதனை கொத்திக்க வைத்தேன்.. எண்ணெய் கொதிக்கும்போது சிறிதளவு கடுகு, கருவேப்பிலை இரண்டையும் போட்டு வதக்கினேன் (வதக்கும்போது கவனம் தேவை கடுகு உடனே கருகிவிடக் கூடியது...), வதக்கிய கடுகினையும், கருவேப்பிள்ளையையும் கொதித்துக்கொண்டிருக்கும் சாம்பாரில் போட்டேன்... வாசனைக்காக கொஞ்சம் வெந்தயம்... காய்கறிகள் நன்கு வேகும் வரை காத்திருந்து, எல்லாக் கலவையும் நன்கு கலக்கும்படி கிளறிய பின்.. வடிசட்டியிலிருந்து சாம்பாரினை இறக்கினேன்... இறக்கியவுடன் கொத்தமல்லியை கொஞ்சம் சாம்பாரில் போட்டேன்...
ஆஹா கமகமாக்கும் சாம்பார் தயார்...


சாம்பார் செய்வதற்கே தாவு தீர்ந்துவிட்டதால் தொட்டுக்கை எதுவும் செய்யவில்லை... அப்பளக்கட்டு ஒன்றை வாங்கி வந்து Refined Oil இல் பொரித்தெடுத்தேன் ... எல்லாம் தயார் சாம்பாரை ருசிபார்க்க அமுதமாய் இருந்தது... ஆஹா ரணஹாசுரா உனக்குள் இப்படி ஒரு சமையல் கலையா... பெருமிததோடு மணியை பார்த்தால் மணி 4.30PM. அடப்பாவிகளா :(  ஒரு சாம்பார வைக்க 5 மணி நேரமா... சரி சாம்பார் நன்றாக வந்ததே அதுவரை சந்தோஷம் என்று மனதை தேத்திக்கொண்டு சாப்பிடுவதற்கு தட்டு, தண்ணீர், அப்பளம், சாம்பார் என அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடத் தயாரானேன்...


டிஷ்... டிஷ்... டிஷ்... இதயமே வெடித்து விட்டது...


(இங்கதான் கதைலயே ஒரு ட்விஸ்ட்)
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..



சாம்பார் வைசேனே தவிர சாதம் வைக்க மறந்துட்டேன்... அரிசிகூட வாங்கவில்லை... :( 

ரணஹாசுரன் மீண்டும் கடைக்கு சென்று அரிசி வாங்கி வந்தாரா? சாதம் சமைத்தாரா? இரவிற்குள்ளாவது சமைத்து முடித்தாரா? இவை அனைத்தும் எனது அடுத்த "சாதம் வைப்பது எப்படி?" பதிவில் தொடரும்...

எங்கே இருந்தோ ஒரு அசரீரி எனக்கு கேட்டது...

அது "டேய் சொம்மா வருவாளா சுகுமாரி?" என்பதுதான்...









சமைத்த பாத்திரங்களை கழுவி வைபதற்கே என் கழுத்து முதல் கால் கட்டை விரல் வரை வலி பெண்டு கழன்றுவிட்டது... சுருங்க கூறின் ஒரு நாள் கூத்தில் புது டிரௌசர் கிழிந்தது...


இந்த கதை மூலம் நான் சொல்ல வர்றது என்னான்னு நீங்க கேட்டிங்கன்னா....

"பழமொழி சொன்னா அனுபவிக்கணும் ஆராயகூடாது" 

எனக்கு பிடித்த பாடல்கள்




             இந்த பதிவில் எனக்கு பிடித்த பாடல்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்... எனக்கு அனைத்து பழைய பாடல்களும் பிடிக்கும், எனவே அவை தவிர்த்து பிற பிடித்த பாடல்களை இங்கு பதிகிறேன்...


நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி - ஹேராம் 


( http://link.sensongs.com/Tamil/Hey%20Ram/nee%20partha.wma )




இந்த பாடலை நான் ஒரு 1000 முறைக்கு மேல் என் கைபேசியில் கேட்டிருப்பேன்... இந்த பாடலை பொறுத்தவரை நான் ஒரு பைத்தியம்(நீ எப்பவுமே பைத்தியம் தானேடா :) )... ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இந்த பாடலை கேட்டுவிடுவேன்... சோகமோ, மகிழ்ச்சியோ, கோபமோ, என் மனநிலையை நடுநிலையில் நிறுத்துவது இந்த பாடல்தான்... இதில் வரும் பியானோ இசை...யப்பா... என்ன ஒரு மென்மை!!! எனக்கு வாழ்வில் ஒரு முறையாவது இந்த ட்யூனை பியானோவில் வாசிக்க வேண்டும் என்ற ஆசை... எனக்கு இந்த பாடலை அவ்வளவு பிடிக்கும்...


சரி இனி அதிகம் பிரபலமாகாத வித்யாசமான, நான் ரசித்த பாடல்களை கூறுகிறேன்... முதல் இடம், இரண்டாம் இடம் என்று கீழ்வரும் பாடல்களை நான் வரிசைபடுத்தவில்லை... 



1. மௌனமே பார்வையாய் பேசிக்கொண்டோம் - அன்பே சிவம்


 ( http://db.oruwebsite.com/Tamil/Songs/03%20-%20A%20to%20Z%20Movie%20Name/A/A%20-%2001/Anbe%20Sivam/www.Duettamil.com%20-%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20Mounamea.mp3 )




இந்த பாடல் படத்தில் இடம் பெறவில்லை... அதிகமானோர் இந்த பாடலை கேட்டிருக்க வாய்பில்லை...மிகவும் அருமையான பாடல், எஸ்.பி.பி குரலில் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும் இந்த பாடல்... அருமையான பாடல் வரிகள் கொண்ட பாடல்...உதாரணத்திற்கு


"இலக்கணம் உடைத்ததும் கவிதை வரும்,
இரவினை துடைத்ததும் கனவு வரும்,
ஸ்வரங்களை திறந்ததும் இசை மலரும்,
உணர்விலே கரைந்ததும் கலை வளரும்..."

இந்த பாடல் படத்தில் இடம் பெறாதது குறையே... இசை : வித்யாசாகர்.


2. இசையில் தொடங்குதம்மா - ஹேராம்


 ( http://link.sensongs.com/Tamil/Hey%20Ram/Isaiyil.wma )





இளையராஜாவின் புதிய முயற்சியில் இதுவும் ஒன்று...இப்படி ஒரு தமிழ் பாடலை நான் கேட்டதே இல்லை... ஹிந்தி சாயலில் அமைந்த இந்த பாடலில் எத்தனை விதமான நெழிவு சுழிவு அமைத்து பாடி இருப்பார் தெரியுமா அஜய் சக்ரபோர்தி...!!! இசையிலும், பாடியவர் குரலிலும் வித்யாசமும், ஆனந்தமும் அனுபவிக்கக்கூடிய பாடல்...


3. காதல் என்னும் கோவில் - கழுகு


 ( http://www.central-musiq.com/download.php?f=Kathal%20Ennum%20Kovil.mp3&fc=0&lid=1 )




இந்த பாடலை 90% பேர் கேட்டிருக்க வாய்பில்லை... கழுகு படத்தில் ஒரு பூவனதுல, பொன்னோவியம் இந்த இரண்டு பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் காதல் என்னும் கோவில் பாடலில் ஒரு சொக்கும் மயக்கம் இருக்கும், இரவு சுமார் 11 மணிக்கு மேல் இந்த பாடலை கேட்டு பாருங்கள் உங்களை ஒரு தனி உலகிற்கு இந்த பாடல் அழைத்து செல்லும், எந்த சலனமும் இல்லாமல் அமைதியாய் ஆரம்பம் முதல் இறுதி வரை இந்த பாடல் மென்மையாய் நகரும்... இசை: இளையராஜா


4. ஏறத்தாழ 7 மணி - பேராண்மை


 (http://download2.tamilwire.com/songs/__P_T_By_Movies/Peraanmai%202009/Yera%20Thala%20-%20TamilWire.Com.mp3)




இது ஒரு சின்ன பாடல், சாதனா சர்கம் பாடியது, இதில் வரும் கிட்டார் இசை எனக்கு மிகவும் பிடிக்கும், வித்யாசாகர் இசையில் ஒரு அமைதியான பாடல்...


5. எங்கிருந்து வந்தாயடா - 5 ஸ்டார்


 (http://link.sensongs.com/Tamil/Five%20Star/Engirindhu%20Vandayada.wma)




இதுவும் ஒரு மென்மையான பாடல்... நல்ல நெழிவு சுழிவு கலந்து பாடகி சாதனா பாடி இருப்பார்... பாடல் வரிகளும் அருமையாக இருக்கும். உதாரணத்திற்கு


"வாசல் வாழையோடு வார்த்தையாடலாச்சு
இனியும் பேசப் புதிய கதைகளேது
ஒருவர் வாழுமுலகில் மவுனந்தானே பேச்சு
மொழிகள் எதற்கு இருவரிணையும்போது"


அடிக்கடி கேட்காவிட்டாலும் வாரம் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்டு ரசிப்பேன்... இசை: பரசுராம் & அனுராதா ஸ்ரீராம்.


6. என்னுள்ளே என்னுள்ளே - வள்ளி 


(http://www.123musiq.com/SOURCE/ALL%20TIME%20HITS/Valli/Ennulle%20Ennulle%20-%20Valli.mp3)




இதற்கு மேல் கிட்டார் இசையை அழகாக இசைத்து நமக்கு யாரும் கொடுத்திருக்க முடியாது... இளையராஜா இளையராஜாதான்... அவ்வளவு அழகான கிட்டார் இசை... வயலினும் இணைந்து வந்து உருக்கும், கண்ணை மூடி இரவில் இப்பாடலை கேட்கும் போது பாடல் முடிகையில் பாடலில் மூழ்கிய மனதை மீண்டும் மீட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வருவது கடினமே... ஸ்வர்ணதா என்னும் இனிமையான பாடகி இப்போது நம்முடன் இல்லை என்றாலும் இந்த பாடல் என்றும் அவர் பெயரை சொல்லும்...


7. நான் பாடும் சந்தம் - டூயட்


 (http://dhool.net/D/Duet/Tamilmp3world.Com%20-%20NaanPaadumSandham.mp3)





இந்த பாடல்தான் டூயட் படத்திலேயே அதிக இசை கருவிகள் கொண்டு இசைக்கபட்ட பாடல்... ஆனால் அதிகம் பிரபலமாகவில்லை... இப்பாடல் கேட்கையில் சாக்சோஃபோன் இசையில் நீங்கள் முழுவதும் நனைவதற்கு ரஹ்மான்னுடன் சேர்ந்து நானும் உத்தரவாதம் அளிக்கிறேன்... எஸ்.பி.பி யின் குரல் என்னும் தேன் மழையில் இந்த பாடலும் ஒன்று...


8. நதியிலாடும் பூவனம் -  காதல் ஓவியம்


 (http://mp3searchy.com/dla.php?id=YgHx_qRm&s=1&n=Ilayaraja%20-%20Kaadhal%20Oviyam%20-%20Nadhiyil%20Adum%20-)




எஸ். பி. பி... என்ன குரல் ஐயா உமக்கு!!! ஜானகி அம்மா நீங்கள் தமிழ் இசையுலகதிற்கு கிடைத்த வரம்... எந்த பாடலாக இருந்தாலும் எந்த சுரமாக இருந்தாலும் மிகவும் சாதாரணமாய் பாடக்கூடிய திறமை உங்கள் இருவருக்கு மட்டுமே உள்ளது... மிகவும் அருமையான மதிய வேளையில் கேட்பதற்கு இனிமையான ஒரு பாடல்...


9. உதயா உதயா - உதயா 


(http://download1403.mediafire.com/6zfms8asd0bg/dytylznztni/Udhaya+Udhaya.mp3)




இந்த பாடல் அதிகமாக புகழ்வதற்கு ஒன்றும் இல்லை... என்று முன்னால் நினைத்து கொண்டிருந்தேன்... ஒருமுறை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சுஜாதாவின் மகள் இந்த பாடலை பாடும்போது இந்த பாடலை எவ்வளவு சிரமம் கொண்டு பாடுகிறார் என்பதனை கவனித்தேன்.. பாடிய பிறகு இந்த பாட்டில் இருக்கும் கடினமான விஷயங்களை அவர் விளக்கி சொன்னார்... அதன் பிறகு இந்த பாடலை கேட்கும் போது ஹரிஹரன் மற்றும் சாதனாவின் குரல் இந்த பாடலை எனக்கு தனி ரசனையுடன் லயிக்க வைத்தது...


10. நான் என்பது நீயல்லவா - சூரசம்ஹாரம்


 (http://www.central-musiq.com/download.php?f=Naan%20Enbathu%20Nee%20Allava.mp3&fc=0&lid=1)




சித்ரா மற்றும் அருண்மொழி குரலில் காலை நேரத்தில் இந்த பாடலை கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும்... அதிலும் "பார்வை செய்த சோதனை நாளும் இன்ப வேதனை காதல் கொண்ட காமனை கண்டு கொண்டு நீ அணை" இந்த வரிகளுக்கான மெட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்...மேலும் தலைவர் முறுக்கு மீசையுடன் டி- ஷர்ட்டீல் அம்சமாக இருப்பார்... கேட்கவா வேண்டும்...

இன்னும் நூற்றுகணக்கான பாடல்கள் உள்ளன... எனது அடுத்த பதிவுகளில் அதனை தொடர்கிறேன். நான் இதில் இட்ட லிங்க் அனைத்தும் சரியாக உள்ளதா என்று எனக்கு தெரியாது... உங்களுக்கு சரியான தரவிறக்கம் தேவை எனில் cooltoad.com தளத்தில் லாகின் செய்து இந்த பாடல்களை தேடி தரவிறக்கி கொள்ளுங்கள்...


Sunday, August 21, 2011

நமீதா நாமம் வாழ்க






அழகென்ற சொல்லுக்கு நமீதா...
உந்தன் அழகன்றி தமிழ்நாட்டில் அழகேது நமீதா???
அழகென்ற சொல்லுக்கு நமீதா...



ஆண்டி உடை அணிந்திடுவாள் நமீதா அவள்
ஆண்ட்டியாய் ஆவதில்லை என்றுமே நமீதா...
குறைவாக உடை அணிவாள் நமீதா....
குறைவாக உடை அணிவாள் நமீதா...
அதில் குறையேதும் இல்லையே உண்மையாய் நமீதா...



அழகென்ற சொல்லுக்கு நமீதா...
உந்தன் அழகன்றி தமிழ்நாட்டில் அழகேது நமீதா???




கழிப்பறைகள் கட்டியவள் நமீதா அதில்
கருணைதான் தெரியுதடி தங்கமே நமீதா...
சோனாக்காக மனம்நொந்த நமீதா...
சோனாக்காக மனம்நொந்த நமீதா...
சோடா பாட்டில்கள் உடைத்திடுவோம் உனக்காக நமீதா...


அழகென்ற சொல்லுக்கு நமீதா...
உந்தன் அழகன்றி தமிழ்நாட்டில் அழகேது நமீதா???



மச்சான்ஸ் என்றழைப்பாள் நமீதா... கேட்டு
மச்சமுள்ள வாலிபர்கள் வாய் திறப்பர் நமீதா...
கொஞ்சு தமிழ் கோகிலம்தான் நமீதா....
கொஞ்சு தமிழ் கோகிலம்தான் நமீதா அது
வஞ்சியற்கு என்றுமே புரிந்திடாது நமீதா...



அழகென்ற சொல்லுக்கு நமீதா...
உந்தன் அழகன்றி தமிழ்நாட்டில் அழகேது நமீதா???
அழகென்ற சொல்லுக்கு நமீதா...
நமீதா...
நமீதா...
நமீதா...



உடல் மண்ணுக்கு உயிர் நமீதாக்கு இதை உரக்க சொல்வோம் உலகிற்கு...






bye bye மச்சான்ஸ்...